காஞ்சியில் பகுதி மின்கடத்தி உற்பத்திப் பூங்கா: விஜய் அறிவிப்பு

காஞ்சியில் பகுதி மின்கடத்தி உற்பத்திப் பூங்கா: விஜய் அறிவிப்பு

2 mins read
f6268059-f26e-4bbd-843a-93fca6916256
நிதித் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்த, கோவை நகரில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘கோவை மின்னிலக்க நிதி மையம்’ நிறுவப்பட உள்ளது. - கோப்புப் படம்: பிஸ்னஸ் ஸ்டேன்டர்ட்
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் பகுதி மின்கடத்தி உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மின்னணுவியல், பகுதி மின்கடத்தி உற்பத்தியில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் ‘செமிகண்டக்டர், மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா’ அமைக்கப்பட உள்ளதாகச் சட்டமன்ற விதி 110இன்கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பூங்கா உருவாக்கப்படும் என்றும் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி, மேம்பாட்டு வசதிகளைக் கொண்ட இத்திட்டத்தின் மூலம் சுமார் 2,000 கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மின்னிலக்க நிதி மையம்

நிதித் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்த, கோவை நகரில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘கோவை மின்னிலக்க நிதி மையம்’ நிறுவப்பட உள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்மூலம் பொது, தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் இம்மையம், நவீன ஆய்வகங்கள், புதுத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்), திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை உள்ளடக்கியதாக அமையும் என்றார் திரு விஜய்.

பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்

மாநிலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி, அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் தொழில் தேவைகளைக் கருத்தில் கொண்டு, திருச்சி மண்டலத்தில் ‘பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம்’ அமைப்பதற்குத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், இத்திட்டம் அப்பகுதியின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்