கோவையில் மாபெரும் செம்மொழிப் பூங்கா திறப்பு

2 mins read
1824eada-18d3-40d9-b9a8-6c0428566b8d
கோயம்புத்தூரில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட செம்மொழிப் பூங்காவை 25.11.2025 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். - படம்: ஊடகம்
multi-img1 of 2

கோயம்புத்தூர்: காந்திபுரத்தில் ரூ.208 கோடி செலவில் 45 ஏக்கர் நிலப்பரப்பில் மாபெரும் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 25ஆம் தேதி திறந்து வைத்தார். ஆனால், டிசம்பர் 1ஆம் தேதி முதல் பொது மக்களுக்குத் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதல்வர் கருணாநிதி, கோயம்புத்தூரில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். பின்னர், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிக்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

நீர்த் தோட்டம், பாலைவனத் தோட்டம், மூங்கில் தோட்டம், ரோஜா தோட்டம். மூலிகைத் தோட்டம், நறுமணத் தோட்டம் என 23 விதமான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் செடி, கொடி, மரம் போன்ற தாவர வகைகளைச் சேர்ந்த ஐநூறாயிரத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன.

மேலும், 500 பேர் அமரக் கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், 400 கார்கள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மழை நீர் சேகரிப்பு வடிகால், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக விளையாட்டுத் திடல்கள், அருங்காட்சியகம், படிப்பகம், பேட்டரி வாகனங்கள், உடற்பயிற்சிக் கூடம், நடைபாதை உள்ளிட்ட அம்சங்கள் இந்தப் பூங்காவில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, இந்த செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளன. மேலும், பூங்கா வளாகத்தில் உள்ள மரங்கள், தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளனு. அதோடு, பெயர் பலகைகளில் கியூ.ஆர் குறியீடு மூலம் அந்தத் தாவரங்கள் குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த செம்மொழிப் பூங்கா வளாகத்தில் பழங்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை, படிப்பக வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்