சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அவர் சந்தித்தார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டுமெனச் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
டிடிவி தினகரனை ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது.
“அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அப்போதுதான் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும்,” எனச் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
மேலும், கட்சியிலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடுவும் அவர் விதித்திருந்தார்.
இதனால், கட்சிக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி கட்சிப் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை அதிமுகவினர் சந்தித்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எடப்பாடி கூறியிருந்த நிலையில், செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.