சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.
மத்திய அமைச்சர், தமிழக காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் இளங்கோவன். கடந்த சில மாதங்களாக அவர் இதய நோய்க்காகத் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அவர் ஏற்கெனவே இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் நுரையீரல் சளியால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காலஞ்சென்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வெ.கி.சம்பத்தின் மகனான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தந்தை வழியைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார்.
கடந்த 1984ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர்,1996-2001 காலகட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.
கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
காங்கிரஸ் மாணவரணி செயலாளர், ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதிரடியான பேச்சுக்கும் செயல்பாட்டுக்கும் பெயர் பெற்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகளை சொந்தக் கட்சியினர் சிலர் கடுமமையாக விமர்சித்தபோதிலும், அரசியல் களத்தில் அவருக்கு செல்வாக்கைப் பெற்றுத் தந்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிடாமல் தன் மகன் ஈ.வெ.ரா. திருமகனுக்கு வாய்ப்பு வாங்கித் தந்து, மகனை வெற்றிபெறவும் செய்தார். எனினும், 2023ஆம் ஆண்டு திருமகன் மாரடைப்பால் காலமானதை அடுத்து, மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்த இளங்கோவன், மகன் வெற்றிபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதியில் தாமே களமிறங்கி வெற்றி பெற்றார்.
தலைவர்கள் இரங்கல்:
“இளங்கோவன் மறைவு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் வேதனையை ஏற்படுத்துகிறது,” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் தமிழ்நாடு அரசியலில் முன்னணித் தலைவராக விளங்கி, நீண்டகாலம் மக்கள் பணியாற்றிய அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் தோழர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தொண்டர்களால் தன்மானத் தலைவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் இழப்பு என்பது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழக காங்கிரசின் ஒரு தூண் சாய்ந்து விட்ட உணர்வோடு மிகுந்த வேதனையில் இருக்கிறேன்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
“ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர். தொண்டர்களுக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு, ஊக்கமளித்து உற்சாகப்படுத்துபவர்,” என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும் தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.