சென்னை: செஞ்சிக்கோட்டை தமிழர்களுக்குச் சொந்தமானது என்றும் தமிழர் வரலாற்றை இழிவுபடுத்தி, அக்கோட்டையை அயலாரின் கோட்டை என்று அடையாளப்படுத்துவதை ஏற்க இயலாது என்றும் சீமான் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து முன்னெடுக்கும் கூட்டுச் சதிக்கு, தமிழக அரசு துணை போவது தமிழர்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகம் என்றும் அவர் சாடியுள்ளார்.
செஞ்சிக் கோட்டையை மராட்டியர்களின் கோட்டையாக மாற்ற நடக்கும் முயற்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் வலியுறுத்தியுள்ளார்.
“விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தமிழ் மன்னராகிய கோனேரிக்கோன் என்பவரால், செஞ்சிக்கோட்டை கட்டப்பட்டது. உலக மரபுடைமைச் சின்னங்களை அங்கீகரிக்கும் அனைத்துலக அமைப்பான யுனெஸ்கோ அமைப்பு, மராட்டிய மன்னர் சிவாஜியின், 12 கோட்டைகளில் ஒன்றாகச் சேர்த்து, செஞ்சியை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
“செஞ்சிக் கோட்டை தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட நம் பாரம்பரியச் சொத்து. யாராலும் எளிதில் கைப்பற்ற முடியாத அதன் அமைவிட சிறப்பால், மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்திலேயே, செஞ்சிக் கோட்டை புகழ்பெற்று விளங்கியது.
அது பல்வேறு ஆளுமைகளின்கீழ் இருந்தது. இதில், மராட்டியர்கள் அக்கோட்டையை ஆண்டது, 22 ஆண்டுகள்தான். அத்துடன், செஞ்சிக் கோட்டையில் மராட்டியர்கள் வலுவான கட்டுமானங்கள் செய்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை.
“மராராட்டியரைவிட செஞ்சிக் கோட்டையை நாயக்கர், ஆற்காடு நவாப், பிஜப்பூர் சுல்தான், முகலாயர், ஆங்கிலேயர் ஆகியோர் அதிக ஆண்டுகள் ஆண்டாலும், அந்தக் கோட்டை தமிழ் மன்னராகிய கோனேரிக்கோனுக்கு சொந்தமானது என்பதை வரலாற்றில் பதிய வேண்டும்.
“செஞ்சி பகுதியில் உள்ள குப்பம் கோனேரிகுப்பம் என்றும், கோட்டை தேசிங்குராஜா கோட்டை என்று அழைப்பதையும் அமைதியாக அனுமதித்ததன் விளைவு, மராட்டியர்களுக்கு சொந்தமானது என்ற நிலை வந்துள்ளது,” என்றும் சீமான் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.