விழுப்புரம்: தமிழ்நாட்டின் செஞ்சிக்கோட்டையை உலக மரபுடைமைச் சின்னமாக யுனெஸ்கோ சனிக்கிழமை (ஜூலை 12) அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான செஞ்சிக்கோட்டை 13ம் நூற்றாண்டில் கோன் சமூக ராஜவம்சத்தால் கட்டப்பட்டது. சோழர்கள் பலவீனம் அடைந்தபின் கோனார் வம்ச ஆட்சியை நிறுவிய ஆனந்தகோன் என்ற குறுநில மன்னரால் இந்த கோட்டை கட்டப்பட்டது.
1921ம் ஆண்டு செஞ்சிக்கோட்டை முக்கியமான தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
தமிழகத்தின் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகியவை யுனெஸ்கோவால் உலக மரபுடைமைச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பட்டியலில் ஆறாவதாக இடம்பிடித்துள்ளது செஞ்சிக் கோட்டை.
இந்தியாவில் செஞ்சி கோட்டை உட்பட 12 இடங்களை உலக மரபுடைமைச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பிற்கு இந்திய அரசு பரிந்துரை செய்தது.
இதனையடுத்து யுனெஸ்கோ அமைப்பினரும் மரபுடைமைச் சின்னங்கள், தலங்களுக்கான அனைத்துலக ஆணைய உறுப்பினர்களும் அடங்கிய குழு கடந்த செப்டம்பரில் செஞ்சிக்கோட்டையை நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
இதன் மூலம் இந்தியாவில் மராட்டியர்களால் கட்டப்பட்ட 12 கோட்டைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மராட்டிய ராணுவத் தளங்கள் பட்டியலில் சேர்ப்பு
மராட்டிய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கோட்டைகள், ராணுவத் தளங்கள் ஆகியன ஐ.நாவின் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இவற்றுடன் சேர்த்து, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சத்ரபதி சிவாஜி வாழ்க்கையுடன் தொடர்புடைய 12 கோட்டைகளை யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது அனைத்து நாட்டு மக்களுக்கும் மிகுந்த பெருமையைத் தரும் தருணம்,” என்று தெரிவித்துள்ளார்.
செஞ்சிக் கோட்டை
‘இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை’ என மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியால் பாராட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையை ‘கிழக்கின் ட்ராய்’ என்று அழைத்தனர்.
உலக மரபுடைமைச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், செஞ்சிக்கோட்டையைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படும். மகாராஷ்டிரம் அரசும் நிதி ஒதுக்கும். செஞ்சிக்கோட்டை சுறுசுறுப்பான சுற்றுலாத் தலமாக மாறும்.
ஏறக்குறைய 1,200 ஏக்கரில் மூன்று சிறு மலைகளை உள்ளடக்கி சுற்றிலும் 12 கிமீ நீளமுள்ள மதில் சுவர்களாலும் 80 அடி அகலம் உள்ள அகழிகளுடன், உயரமான மதில்களுடனும் செஞ்சிக் கோட்டை கட்டப்பட்டுள்ளது.
கோட்டைக்கான அனைத்து அம்சங்களுடனும் தர்பார் மண்டபம், அந்தப்புரம், படைவீடுகள், யானை மண்டபம், குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், கோயில்கள், தானியக்களஞ்சியங்கள், ஆலயங்கள், உடற்பயிற்சிக்கூடம், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு, தோரண வாயில்கள், காவல் அரண்கள், பாதாளச் சிறை, மதில்சுவர், அகழி என ஒரு தமிழகத்தில் இருக்கும் ஒரே கோட்டை, செஞ்சிக் கோட்டை.
சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு செஞ்சி எழுச்சி பெற்றது. புதுச்சேரிக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் இன்று ஒரு சிறுநகரமாக இருக்கும் செஞ்சி, ஒரு காலத்தில் ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை பரவியிருந்த நெடுநிலத்தின் தலைநகராக இருந்தது. செழிப்பும் செல்வமும் நிறைந்த நகராக செஞ்சி திகழ்ந்தது.
யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மகாராஷ்டிராவில் உள்ள சல்ஹெர் கோட்டை, சிவனேரி கோட்டை, லோஹ்காட், கண்டேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க், சிந்துதுர்க், தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டை ஆகியவை பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த மராட்டிய ராணுவக் கோட்டைகளும் தளங்களும் 17 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டவை,” என்று தெரிவித்துள்ளது.