சென்னை: காலஞ்சென்ற தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்ற இளையரை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (மே 11) கைது செய்தது.
இந்நிலையில், இலங்கைத் தமிழர்களின் இறப்புக்கு பழிதீர்க்கும் விதமாகவே, தாம் குண்டு வீச முற்பட்டதாக முத்துச்செல்வன் என்ற அந்த இளையர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
26 வயதான இவர், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 11) சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடங்களைச் சுற்றிப் பார்ப்பதுபோல் பாசாங்கு செய்த அவர், திடீரென மண்ணெண்ணெய் குண்டு ஒன்றை எடுத்து வீச முயன்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், அவரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அளித்த வாக்குமூலத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து தாம் புத்தகங்கள் மூலம் தெரிந்துகொண்டதாகவும் இலங்கைத் தமிழர்களின் இறப்புக்கு பழிவாங்க இவ்வாறு செய்ததாகவும் முத்துச்செல்வன் கூறியுள்ளார்.
எனினும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் அவருக்கு, மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதும் காவல்துறை, சென்னையில் உள்ள மனநல மருத்துவமனையில் அவரைச் சேர்க்க உள்ளது.

