புதுடெல்லி: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணையிலிருந்து தான் விலகுவதாக நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு வேறு அமர்வில் பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று தினமலர் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்படட் அவரைப் பிணையில் விடுவிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன் பின்னர் செந்தில் பாலாஜி உடனடியாக அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்குகள் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகின்றன. அவர், அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றிருப்பதால் வழக்கில் தாக்கம் ஏற்படும்.
“எனவே, அவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யவேண்டும்,” எனக் கூறி, பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு;j தாக்கல் செய்தார். இதேபோல வேறு சிலரும் மனுத் தாக்கல் செய்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கின் தொடர்பில் மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களை நாடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு எதிராக இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் மறுத்தனர்.
இந்த வழக்கு, உச்சநீதிமன்ற கே.வி.விஸ்வநாதன் உள்ளிட்டோரைக் கொண்ட அமர்வில் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 10) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
நீதிபதி விஸ்வநாதன் விலகிக்கொண்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இம்மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

