தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பதவி விலகும் செந்தில் பாலாஜி; மசோதா தாக்கல் செய்த ரகுபதி

2 mins read
a0496db7-55b6-41d2-92a6-26725d5134c6
செந்தில் பாலாஜி. - படம்: ஊடகம்

சென்னை: பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், கைதாகி பிணையில் வெளிவந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து விலக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜிக்கு தேவைப்படுவது பிணையா அல்லது அமைச்சர் பதவியா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து அவர் எதிர்வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சனிக்கிழமை சட்டப்பேரவையில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறைத் தண்டனை விதிக்க வழிவகுக்கும் மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அதை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி பதவி விலக முடிவு செய்துவிட்டதாகக் கூறப்பட்டது. அவருக்குப் பதிலாக, திமுக மூத்த தலைவரான மைதீன் கான் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்றும் அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்புகளை ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பதவியில் நீடிக்கும் பட்சத்தில், செந்தில் பாலாஜியின் பிணை ரத்து செய்யப்பட்டு, சிறைக்குச் செல்ல நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

முன்னதாக, மோசடி வழக்கில் பிணை வழங்க செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்