தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர் கொலைகள்; காலியான நாட்டாகுடி கிராமம்: ஒருவர் மட்டுமே வசிக்கிறார்

2 mins read
c00ed6f5-64b5-499c-b785-42a0b9cab4ac
(இடமிருந்து) தங்கராஜ், வெறிச்சோடிய நாட்டாகுடி கிராமம். - படம்: ஊடகம்

சிவகங்கை: அடுத்தடுத்து நிகழ்ந்த கொலைச் சம்பவங்களால் பீதியடைந்த கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை மொத்தமாக காலி செய்துவிட்டனர்.

ஏறக்குறைய 150 குடும்பங்கள் வெளியேறிய நிலையில், ஒருவர் மட்டும் இன்னும் அங்கு வசிக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், மாத்தூர் ஊராட்சியின் கீழ் நாட்டாகுடி, வேலாங்குளம், இலந்தங்குடி உட்பட ஐந்து கிராமங்கள் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயம் செழித்ததால் ஐந்து கிராம மக்களும் நிம்மதியாக இருந்தனர். அச்சமயம் 200 ஏக்கரில் விவசாயம் நடந்து வந்தது.

ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடும் வறட்சி, மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. வாழ்வாதாரங்களை இழந்த ஏராளமான மக்கள் அருகேயுள்ள நகர்ப் பகுதிகளில் குடியேறிவிட்டனர்.

அதன் பின்னர், ஐம்பது குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்த நிலையில், குடிநீர், சாலை என அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக, நாட்டாகுடி கிராமம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில், அங்கு குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன.

அண்மையில், ஒரு வயது குழந்தையின் கழுத்தை நெரித்து தந்தையே கொலை செய்து உப்பாற்றில் புதைத்தார். கிராமப் பிரமுகர் ஒருவரை அடையாளம் தெரியாத சிலர் வெட்டிச் சாய்த்தனர்.

இதேபோல் தன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த விவசாயக் கூலி ஒருவரது தலை துண்டிக்கப்பட்டு, சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள கண்மாயில் வீசப்பட்டது.

இதனால் பெரும்பாலானோர் நாட்டாகுடி கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

அரசு உரிய பாதுகாப்பு அளிக்கும் என்பதால் கிராம மக்கள் அச்சமின்றி மீண்டும் அங்கு குடியேறலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பீதிக்கு மத்தியிலும் 55 வயதான தங்கராஜ் என்பவர் மட்டும் நாட்டாகுடி கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.

“சொந்த ஊர் என்பது பெற்ற தாயைப் போன்றது. எனவே என் கிராமத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இங்கேயே வசிக்கிறேன்,” என்று கூறியுள்ளார் தங்கராஜ்.

குறிப்புச் சொற்கள்