சென்னை: போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறி, கல்லூரி மாணவர்கள் எழுவரைச் சென்னை கொடுங்கையூர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
வீட்டிலேயே ‘மெத் லேப்’ என்ற பெயரில் அவர்கள் இணைந்து போதைப்பொருள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைதானவர்களில் நால்வர் பொறியியல் பட்டதாரிகள் என்றும் இன்னொருவர் வேதியியல் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர் என்றும் காவல்துறை தெரிவித்தது. அவர்களில் ஒருவர், திமுக கவுன்சிலரின் மகன் எனக் கூறப்பட்டது.
சேர்ந்து படிக்கிறார்கள் எனப் பெற்றோர்கள் கருதிய நிலையில், அம்மாணவர்கள் இத்தகைய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டது அவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மைக்காலமாகத் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தடுக்க தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்நிலையில், கொடுங்கையூரில் மாணவர்கள் சிலர் ‘மெத்தம்பெட்டமைன்’ எனும் போதைப்பொருளைத் தயாரித்து விற்பதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனையடுத்து, அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தி, அந்த மாணவர்களை மடக்கிப் பிடித்தனர்.
அங்கிருந்து 250 கிராம் மெத்தம்பெட்டமைன், அதனைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்கள், ஆய்வகக் கருவிகள் உள்ளிட்டவற்றைக் காவல்துறை கைப்பற்றியது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.
முன்னதாக, அந்த மாணவர்கள் சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 250 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் ஒரு கிராம் 2,000 ரூபாய் என்ற விலையில் அதனை அவர்கள் விற்றனர். ஆனால், அது போலியானது என்று அதனை வாங்கியவர்கள் கூறியதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதனையடுத்து, போதைப்பொருளைத் தாங்களே தயாரித்து விற்பது என முடிவுசெய்த அவர்கள், அதற்காக 2022ஆம் ஆண்டு வேதியியல் இளநிலை பட்டப்படிப்பில் தங்கம் வாங்கிய ஒருவரையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர்.
கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் எழுவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.