தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏழு மீனவர்கள் கைது: இலங்கைக் கடற்படையைக் கண்டித்து போராட்டம்

2 mins read
8ca4bd17-5c52-4e05-9c99-a12e61b4f233
நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். - படம்: ஊடகம்

ராமேசுவரம்: கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் ஏழு பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 356 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நண்பகலில் அவர்களைக் கண்ட இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்தனர்.

அப்போது அங்கு வந்த இரண்டு விசைப்படகுகளை சுற்றிவளைத்து சிறைப் பிடிக்க அவர்கள் முயன்றனர். அதனை கண்டதும், மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த இருதய டிக்சன் விசைப்படகு மட்டும் இலங்கை கடற்படையினரிடம் சிக்கியது.

அந்தப் படகில் இருந்த மீனவர்கள் டல்லஸ் (56), பாஸ்கரன் (45), ஆரோக்கிய சான்டிரின் (20), சிலைடன் (26), ஜேசுராஜா(33), அருள்ராபர்ட் (53), லொய்லன் (45) ஆகிய ஏழு பேரையும் கைது செய்தனர்.

பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேல் நடவடிக்கைக்காக மாலையில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அந்த ஏழு பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனிடையே, இலங்கைக் கடற்படையினரிடம் சிக்காமல் தப்பி வந்த மீனவர்கள், தங்களுடன் மீன்பிடிக்க வந்த படகினையும் மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற தகவலை மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.

அதனால் பதற்றம் அடைந்த தங்கச்சிமடம் மீனவர்கள், தங்களது குடும்பத்துடன் தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி அவர்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

அந்த திடீர் போராட்டத்தால் ராமேசுவரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்ய முயன்றபோதிலும், நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்
மீனவர்கள்போராட்டம்கைது