புதுடெல்லி: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் ஏறக்குறைய ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
டெல்லியில் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்ததை அடுத்து தனி விமானத்தில் சென்னை திரும்பியதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதையடுத்து தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்தும் பொருட்டு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதற்காக அவர் டெல்லி சென்று இருந்தார். ஜனவரி 12ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் முன்னிலை ஆனார்.
அப்போது அவரிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கரூரில் உங்களுடைய பிரசாரத்துக்கு ஒதுக்கப்பட்ட பகுதி குறுகலானது என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா ? பொது மக்கள் மயங்கி விழுந்ததை கண்ட பிறகும் உங்கள் உரை நீடித்ததா? பிரசாரப் பகுதிக்கு எத்தனை மணிக்கு வரத் திட்டமிட்டு இருந்தீர்கள், எத்தனை மணிக்கு வந்தீர்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதல் அர்ஜூனா ஆகியோரும் சிபிஐ விசாரணைக்காக முன்பு டெல்லி சென்று இருந்தனர். அப்போது மூவரிடமும் மூன்று நாள்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
எனவே விஜய்யிடமும் மூன்று நாள்களாவது விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 12ஆம் தேதி இரவே தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணை தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அநேகமாக வரும் 19ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு
இதனிடையே ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.
‘ஜனநாயகன்’ படத்தை தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல் என்று இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் மிஸ்டர் மோடி,” என்றும் தமது எக்ஸ் தள பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

