திண்டுக்கல்: திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
சிட்டி ஹாஸ்பிட்டல் என்னும்ம் அந்த மருத்துவமனையில் வியாழக்கிழமை (டிசம்பர் 12) இரவு 9.40 மணியளவில் மின்கசிவு காரணமாக கணினிப் பிரிவு பகுதியில் தீப்பிடித்தது. தீ மற்ற பகுதிகளுக்கும் பரவி மருத்துவமனையின் நான்கு மாடிகளிலும் எரியத் தொடங்கியது.
விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் இரவு 10.30 மணியளவில் தீயை அணைத்தனர்.
மருத்துவமனையின் உள்ளே சிகிச்சை பெற்று வந்த நூற்றுக்கும் மேலான நோயாளிகள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களில் ஒரு சிறுமி உட்பட ஏழு பேர் தீயில் கருகியும், புகை மண்டலத்தில் சிக்கி மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் உள்ள மின்தூக்கியில் இருந்தவர்களும் பலியானோரில் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீ பரவியதும் மின் விநியோகம் தடைபட்டதால் மின்தூக்கி பாதியில் நின்றதன் காரணமாகவே உள்ளே இருந்தவர்களால் வெளியேற முடியாமல் மூச்சுத் திணறி உயிருக்குப் போராடியதாக விசாரணையில் தெரிய வந்தது.
தீ விபத்தில் சிக்கி இருந்த நோயாளிகள் மற்றும் அவர்களைப் பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 32 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து இரவு முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அப்பகுதியில் இருந்தது.
தீ விபத்து குறித்த தகவலறிந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.என்.பூங்கொடி, சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் உட்பட அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மருத்துவமனையிலிருந்த நோயாளிகள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர்களுக்குத் தேவையான சிகிச்சையளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்குத் தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர்.

