இந்தியாவில் ஏழு லட்சம் போலி வழக்கறிஞர்கள்: முன்னாள் நீதிபதி கவலை

இந்தியாவில் ஏழு லட்சம் போலி வழக்கறிஞர்கள்: முன்னாள் நீதிபதி கவலை

1 mins read
acc6bdf6-a83d-44bd-94e0-39ea531568c0
முன்னாள் நீதிபதி வீ.பாரதிதாசன். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

விழுப்புரம்: இந்தியாவில் உள்ள மொத்த வழக்கறிஞர்களில் ஏறக்குறைய ஆறு முதல் ஏழு லட்சம் போலி வழக்கறிஞர்கள் உள்ளனர் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வீ.பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியாவில் மொத்தம் 18 லட்சம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், வழக்கறிஞர் மன்றம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உச்ச நீதிமன்றம், பிற நீதிமன்றங்களில் 30 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை முறையான, தகுதியில்லாத அல்லது போலி வழக்கறிஞர்கள் வலம்வருவதாக திரு பாரதிதாசன் சுட்டிக்காட்டினார்.

ஒரு காலத்தில் ஆண்கள் ஆதிக்கத்தில் இருந்த சட்டத்துறையில், தற்போது ஆண், பெண் விகிதம் 70:30 என்ற அளவில் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கீழமை நீதிமன்றங்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமான பெண் நீதிபதிகளே பணியாற்றி வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

வழக்கறிஞர் தொழிலின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்ற, இளம் வழக்கறிஞர்கள் நேர்மையாகவும் கடின உழைப்புடனும் கட்சிக்காரர்களுக்கு உண்மையாகவும் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

மேலும், சட்டத்துறையின் கண்ணியத்தையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க போலி வழக்கறிஞர்களை முற்றிலுமாகக் களையெடுக்க வேண்டியது அவசியம் என திரு பாரதிதாசன் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
சென்னை உயர் நீதிமன்றம்வழக்கறிஞர்நீதிபதிபோலிபெண்கள்