‘தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழையும் பெய்யும், வெயிலும் கொளுத்தும்’

‘தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழையும் பெய்யும், வெயிலும் கொளுத்தும்’

1 mins read
36d77daf-97dd-465e-a829-463a84face71
கோப்புப்படம்: - ஊடகம்

சென்னை: தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இம்மாதம் 20ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், “தென்னிந்தியப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜூன் 20ஆம் தேதிவரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

“அதே வேளையில், அடுத்த ஐந்து நாள்களுக்கு, அதாவது ஜூன் 18 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

“சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது,” என்று கூறியுள்ளது.

மேலும், ஜூன் 18 வரை மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 42 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளி வீசக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதனால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்