தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 17 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காகத் தெருக்கூத்துக் கலைஞர்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2023 மே 24ஆம் தேதி இரவு தெருக்கூத்து நடைபெற்றது. அதைப் பார்ப்பதற்காக 17 வயதுச் சிறுமி தனது பெரியம்மா உடன் சென்றார். தெருக்கூத்து நடந்துகொண்டிருந்தபோது அந்தச் சிறுமி வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற மூவர் அந்தச் சிறுமியை வயல்வெளிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் அந்தச் சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவருடைய பெரியம்மா கேட்டபோது, நடந்த சம்பவம் பற்றி சிறுமி கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், சம்பவம் குறித்து தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
பின்னர், போக்சோ வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர்கள் கொல்லாபுரி (65), மணிகண்டன்(55), மஞ்சுநாதன்(33) ஆகிய மூவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு தர்மபுரி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில் குற்றச்சாட்டு உறுதியானதால் மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அசின்பானு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) தீர்ப்பளித்தார்.

