ராமநாதபுரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: நால்வர் கைது

2 mins read
f13a3fdf-e46d-4057-9cf6-bed435d53e95
ராமநாதபுரத்தின் புத்தேந்தல் என்னும் சிற்றூரில் ஆட்டோவில் சென்ற பெண் நால்வரால் சீரழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பேற்படுத்தியுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

ராமநாதபுரம்: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையென, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் புத்தாண்டு தினத்தில் நால்வர் சேர்ந்து ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தின் புத்தேந்தல் பகுதியில் வசிக்கும் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், புத்தாண்டுக்கு முந்தைய தினம் இரவு, உறவினரைப் பார்க்கச் சென்றுவிட்டு ஆட்டோவில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். புத்தேந்தல் ரயில்வே கேட் அருகே ஆட்டோ வந்தபோது, அப்பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் ஆட்டோவில் இருந்த ஓட்டுநரையும் அந்தப் பெண்ணையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.  

இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநரை அடித்துத் துரத்திவிட்டு, அந்தப் பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அந்தப் பெண், டிசம்பர் 31ஆம் தேதி இரவு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். மருத்துவர்களிடம் அவர், தன்னை நான்கு பேர் தாக்கி, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் ராமநாதபுரம் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறை, அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தியது. அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த அந்த நான்கு பேரையும் காவல்துறை கைது செய்தது.

இந்த வழக்கில் ராமநாதபுரம் புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்குமார் (வயது 27), சரண்முருகன் (29), செல்வகுமார் (27), குட்டி என்ற முனீஸ் கண்ணன் (25) ஆகிய நால்வரையும் கைது செய்த காவலர்கள், அவர்களைப் பரமக்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்றம் அந்த நால்வரையும் ஜனவரி 10ஆம் தேதி வரை சிறையில் அடைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்