தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பள்ளி முதல்வர், செயலாளர், உடற்கல்வி ஆசிரியர் கைது

2 mins read
7170ddf1-4c85-469e-a6cb-f80297d52bd8
ஆசிரியரே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய தகவலை அறிந்து, மாணவிகளின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியில் திரண்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். - படம்: தமிழக ஊடகம்

தூத்துக்குடி: தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஒருவர், பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை தந்தது திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, உடன்குடி பகுதியில் இயங்கிவரும் சல்மா மெட்ரிக் பள்ளியின் முதல்வர், செயலாளர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

சென்ற அக்டோபர் 22ஆம் தேதி தூத்துக்குடியில் பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. அதற்காக, சல்மா மெட்ரிக் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், தமது பள்ளி மாணவிகளை அழைத்துச் சென்றார்.

மறுநாளும் போட்டிகள் நடைபெற இருந்ததை அடுத்து, அன்றைய நாள் இரவு தூத்துக்குடியில் உள்ள ஒரு தங்குவிடுதியில் மாணவ மாணவியரும் ஆசிரியர் பொன்சிங்கும் தங்கினர்.

அப்போது, மாணவிகள் சிலரை மது அருந்த வற்புறுத்திய பொன்சிங், அவர்களிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை தந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தங்கள் பெற்றோரிடம் கூறினர். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோரும் உறவினர்களும் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து காவல்துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளும் அங்கு சென்று, பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை பணிநீக்கம் செய்துவிட்டதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

அக்கம்பக்கத்தினர் பலரும் பள்ளிக்குமுன் திரண்டதால் பாதுகாப்பின் பொருட்டு திங்கட்கிழமை (நவம்பர் 11) மாலை அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்தது தொடர்பில் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிந்தது. அதனடிப்படையில் பள்ளி முதல்வரும் செயலாளரும் கைதுசெய்யப்பட்டனர்.

இதனிடையே, கோவையில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கும் கைதுசெய்யப்பட்டு, திருச்செந்தூருக்கு அழைத்துவரப்பட்டார்.

விசாரணைக்குப் பிறகே, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்த விவகாரத்தில் பொன்சிங் தனித்துச் செயல்பட்டாரா அல்லது வேறு எவருக்கேனும் தொடர்புள்ளதா என்பது தெரியவரும்.

குறிப்புச் சொற்கள்