கரூர்: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் போக்சோ (குழந்தைளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவர் இளவரசன், 39. கரூர் மாவட்டம் அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்த அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கு இளவரசன் அடிக்கடி பாலியல் தொல்லை அளித்ததோடு பாலியல் வன்கொடுமையும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மகள் மூலம் தகவலறிந்த மாணவியின் தாய், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்தார்.
அந்த அதிகாரியின் உதவியுடன் காவல்துறையினர், காவலர் இளவரசனை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து, சனிக்கிழமை (ஜனவரி 18) கரூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய உதவி ஆய்வாளரைத் தாக்கிய வழக்கில் இளவரசன் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.