சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) விரைவு ரயில் ஒன்று கேரளாவில் இருந்து வந்தடைந்தது.
ரயிலின் முன்பதிவுப் பெட்டியில் தகவல் தொழில்நுட்பத் துறை பெண் ஊழியர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
அதிகாலை 2 மணியளவில் ரயில் காட்பாடி வந்தபோது அந்தப் பெட்டியில் ஏறிய இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில், ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தியது.
பெண் பயணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சென்னை ஓஎம்ஆர் பகுதியில் தங்கியிருந்த கிஷோர் என்ற இளைஞரை அவர்கள் கைது செய்தனர்.
தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கிஷோர், ஈரோட்டில் இருந்து சென்னை செல்வதற்காகக் காத்திருந்தபோது ரயிலை தவறவிட்டுள்ளார்.
பின்னர் பழனி விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறியபோது ஐ.டி. பெண் ஊழியரைப் பார்த்த கிஷோர், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. விசாரணை நீடிக்கிறது.

