திண்டுக்கல்: திண்டுக்கல் வணிக வரித் துறை அலுவலகம், தஞ்சாவூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி உதயராஜின் (26) மனைவி சுகன்யாவுக்கு (25) ரூ.60.41 லட்சம் வரி நிலுவைத்தொகையை செலுத்தக் கோரி குறிப்பாணை அனுப்பியதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் சங்கனம்பட்டியில் ‘எஸ்ஜி டிரேடர்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் ரூ.1.67 கோடிக்கு வர்த்தகம் செய்ததாகவும் அதற்கான ஜிஎஸ்டி வரி, அபராதத் தொகை ரூ.60.41 லட்சம் நிலுவை உள்ளதாகவும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுகன்யா, திண்டுக்கல் வணிக வரித் துறைக்கு நேரில் வந்து புகார் அளித்தபோது, தனது ஆதார் எண், ‘பான்’ அட்டை, முகவரியை மோசடியாகப் பயன்படுத்தி வர்த்தகம் நடந்துள்ளது என்றும் அந்த நிறுவனத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.
வணிக வரித் துறை அதிகாரிகள் விசாரித்ததில், ‘எஸ்ஜி டிரேடர்ஸ்’ நிறுவனம் ஆந்திர மாநிலத்திற்குப் பழைய இரும்புப் பொருள்களை ரூ.1.67 கோடிக்கு விற்றதாகவும் வரி செலுத்தாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டு, உரிமையாளர் என்ற அடிப்படையில் சுகன்யாவின் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறினர்.
தற்போது, சுகன்யாவின் ஆவணங்கள் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டது உறுதியானதால், இணையக் குற்றப் பிரிவு, காவல் நிலையத்தில் புகார் அளிக்க சுகன்யாவிற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

