சென்னை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கியிருக்கும் வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவர்கள் வாக்களிக்கத் தங்கள் சொந்த ஊருக்குப் பயணமாகி வருகிறார்கள்.
அவர்களின் வசதிக்காக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) முதல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 5,574 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் அடுத்தபடியாக தனியார் ஆம்னி பேருந்துகளையே நாடுவார்கள்.
அதனைப் பயன்படுத்தி பல ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளன.
வாக்களிப்பு நாளுக்கு முந்திய செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்களும் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்ல படுக்கை வசதி கொண்ட சாதாரணப் பேருந்தில் வழக்கமான நாள்களில் ரூ.1,400 என இருந்த கட்டணம், ரூ.3,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, தூத்துக்குடி செல்ல ரூ.1,700 வரை இருந்த கட்டணம் தற்போது ரூ.3,200 வரையும் மதுரைக்கு ரூ.1,100ஆக இருந்த கட்டணம் ரூ.2,200 முதல் ரூ.3,500 வரையும் திருச்சிக்கு ரூ.1,500ஆக இருந்த கட்டணம் ரூ.2,000 முதல் ரூ.2,600 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதனால், ஊர்திரும்பும் பொதுமக்கள் சிரமங்களைச் சந்தித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்புக்குழு, தமிழ்நாடு முழுவதும் ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை நடத்திவருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

