சித்த மருத்துவத்துறையின் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சித்த மருத்துவத்துறையின் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

2 mins read
3fe1ea4f-0baa-4e08-8237-75fb483dd6d0
உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி சென்னையில் சாய்ரா சித்த மருத்துவத்துறையின் மகளிர் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மகளிர் மருத்துவத் துறை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பங்கேற்றனர். தாம்பரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சித்த மருத்துவத்துறையின் மகளிர் துறை ஏற்பாடு செய்திருந்தது.

சித்த மருத்துவத்துறையின் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் ஏ.எம்.அமலா ஹேசல் தொடக்க உரையாற்றினார். மருத்துவர்கள் சி.சுஜிதர், என்.சுமித்ரா ஆகியோர் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம், பின்னர் இணை உணவுடன் தாய்ப் பாலைத் தொடர்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறைகள், குழந்தை சரியாகப் பால் குடிப்பதை உறுதி செய்யும் அறிகுறிகள், மார்பக வீக்கம், காம்புகளில் வலி, பால் நாளங்களில் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கையாளும் முறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

தாய்ப்பால் தானம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட மனிதப் பால் வங்கிகள் மூலம் தாய்ப்பால் தானம் செய்வதன் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது.

உலகம் முழுதும் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7 வரையில் தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்வில் ஆரோக்கியமான தொடக்கத்தை அளிக்கும் வகையில், தாய்ப்பால் ஊட்டுதலுக்கான ஆதரவையும் சுகாதார அமைப்புகளையும் வலுப்படுத்துமாறு நாடுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, உலக சுகாதார நிறுவனமும் யூனிசெஃப் அமைப்பும் இணைந்து தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துமாறு உலக சுகாதார அமைப்புகளுக்கு வலியுறுத்தியுள்ளன.

தாய்ப்பால் ஊட்டுதலைத் தாயின் பொறுப்பு மட்டுமே என்று விட்டுவிடாமல் அதைச் சாத்தியமாக்கும் சுகாதார அமைப்புகள், தொண்டூழிய நிறுவனங்கள் பணியிடங்களிலும் பொது இடங்களிலும் தாய்ப்பால் ஊட்டுவதற்கான தனிப்பட்ட இடங்களை உருவாக்கத் தொடங்க வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் குறித்தும் பாலூட்டும் தாய்மார்கள் சத்தான உணவுகளை உட்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் ஆதரவளிக்கும் சுகாதார அமைப்புகளையும் தொண்டூழிய நிறுவனங்களையும் விரிவாக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சித்த மருத்துவம்தாய்ப்பால்சென்னைஉலக சுகாதார நிறுவனம்