காவிரித் தண்ணீர் கோரி டெல்லியில் முற்றுகைப் போராட்டம்

காவிரித் தண்ணீர் கோரி டெல்லியில் முற்றுகைப் போராட்டம்

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

29 Nov 2026 - 7:16 pm

1 mins read

திருச்சி: காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை (நவம்பர் 28) நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், விவசாய சங்கத் தலைவர்கள் அய்யாக்கண்ணு, காவிரி தனபாலன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூட்டாகப் பேசினர்.

நொடிக்கு 2,000 கனஅடித் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு நான்காவது முறையாகத் தண்ணீர் திறக்கவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

முன்னோட்டமாக, 84 விவசாய சங்கங்களின் தலைவர்கள் அடுத்த வாரம் சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தமிழக முதலமைச்சரையும் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து 180 நாள்கள் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நடப்பாண்டில் 45 நாள்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். கர்நாடகத்துக்குச் செல்லும் மின் விநியோகத்தைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நெய்வேலி அனல்மின் நிலையத்திலிருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் செல்வதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தராத கர்நாடகத்துக்கு மின்சாரம் செல்லாத வகையில் அனைத்துச் சங்கங்களும் ஒன்றிணைந்து போராடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்