ஆட்டோ ஓட்டுநர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி முற்றுகைப் போராட்டம்

2 mins read
தொழிற்சங்கக் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு எச்சரிக்கை
72faf9ed-985c-4561-9021-79b2081ba259
அண்ணாசாலை, தாராபூர் டவர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளர்கள். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: ஆட்டோ ஓட்டுநர்களின் மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஆட்டோ ஓட்டுநர் சங்கக் கூட்டமைப்பு, அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் சென்னையில் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் மீட்டர் கட்டண உயர்வு கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர்.

இதுகுறித்துப் பேசிய அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், “இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட 120,000 ஆட்டோக்கள் ஓடவில்லை. இப்போது நடந்து வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆட்டோவுக்கான மீட்டர் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடவேண்டும். இல்லையெனில், போக்குவரத்துத் துறையின் மானியக் கோரிக்கை தொடர்பில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்களுடன் போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவர்,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பேசியபோது, “அனைத்து சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். அவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் போராட்டம் தேவையற்றது,” என்று கூறியுள்ளார்.

போராட்டம் நடைபெற்ற வேளையிலும், சென்னையில் புதன்கிழமை பரவலாக ஆட்டோக்கள் இயக்கப்பட்டதைக் காணமுடிந்தது. அதனால், பொதுமக்கள் இடையூறு இன்றி பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மாலை 6 மணிக்குப் பிறகு அனைத்து ஆட்டோக்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்