கோவை: மருதமலை முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற இருந்த நிலையில், அங்கிருந்த வெள்ளி வேல் மாயமானதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சாமியார் போல் வந்த ஆடவர் ஒருவரால் அந்த வேல் திருடிச் செல்லப்பட்டது, அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது.
முருகப் பெருமானின் ‘ஏழாம் படைவீடு’ என்று போற்றப்படுகிறது மருதமலை திருக்கோவில். அங்கு இன்று குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற இருந்தது.
இந்நிலையில், கோவிலின் தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேல் திடீரெனக் காணாமல் போனது. இதனால் கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்த வேல் ஏறக்குறைய இரண்டரை அடி உயரம் கொண்டது என்றும் இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என்றும் கூறப்படுகிறது.
கோவில் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியபோதும் அந்த வெள்ளி வேல் கிடைக்கவில்லை.
இறுதியாக, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது புதன்கிழமை (மார்ச் 2) பிற்பகல் 12 மணியளவில், சாமியார் வேடத்தில் வந்த ஆடவர் ஒருவர், வெள்ளி வேல் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சென்று அதை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த ஆடவர் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, வெள்ளி வேல் வைக்கப்பட்டிருந்த தியான மண்டபம் கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
எனவே, இந்தச் சம்பவம் கோவிலில் நடைபெற்றதாகக் கருத இயலாது என்றும் கூறியுள்ளது.

