சென்னை: நடிகர் சிங்கமுத்துக்கு எதிராக நடிகர் வடிவேலு, அவதூறு வழக்குத் தொடுத்திருந்தார். புதன்கிழமை விசாரிக்கப்பட்ட அந்த வழக்கில் சாட்சியம் அளிக்க நடிகர் வடிவேலும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
சமூக ஊடகங்கள், ‘யூடியூப்’ சேனல்களுக்கு நகைச்சுவை நடிகா் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக நடிகர் சிங்கமுத்து ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகா் வடிவேலு சென்னை உயா் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி ஜெயச்சந்திரன்முன் விசாரணைக்கு வந்தபோது, வடிவேலுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இனிமேல் அதுபோன்று அவதூறான கருத்துகளைத் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யும்படி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி நடிகா் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதி, விசாரணைக்காக வழக்கை மாஸ்டா் நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தாா்.
இதையடுத்து நடிகா் வடிவேலு சாட்சியம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலையானார். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞா் முறையிட்டாா். மேலும், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டாா்.
அதையடுத்து, மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டஃபர், வழக்கை உயா் நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகவும் அங்கே முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தாா்.

