சென்னை: முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட கையோடு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார் விஜய்.
ஆய்வுக்கூட்டத்துக்குப் பின்னர் பெண்களின் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்படும் என்றும் அது முதல்வர் விஜய்யின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சிறப்பு அரசாணையும் வெளியிடப்பட்டது.
பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு தடுப்பு, பாதுகாப்பு உத்திகளை, முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக்கூடிய ஒரு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என அரசாணை தெரிவிக்கிறது.
“ஆபத்தில் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில், இப்படையினரின் இருப்பை வெளிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மூலம் பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்தச் சிறப்புப் படை, போதுமான ஊழியர்கள், அதிநவீன வசதிகளுடன் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்,” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், போதைப்பொருள்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார், முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், முதல்வரின் செயலாளர் ஜி. லட்சுமி பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும் அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

