பழங்குடியின குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்த ‘சிங்கப்பெண்’ படை

பழங்குடியின குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்த ‘சிங்கப்பெண்’ படை

1 mins read
53fd8288-4192-48ae-8c64-da55ba2e2a5c
குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்த காவலர்கள், அவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் புரியவைத்தனர். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

செங்கல்பட்டு: பள்ளிக்குச் செல்லாமல் இருந்த குழந்தைகளை மீட்டு, பள்ளியில் சேர்த்த செங்கல்பட்டு மாவட்டச் சிங்கப்பெண் அதிரடிப்படையைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.வி.களத்தூர் கிராமத்தில் உள்ள பழங்குடியினக் குடியிருப்பில் சில குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் இருந்துவந்தது காவல்துறையின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து, கல்வியின்றி குழந்தைகள் முடங்குவதைத் தடுக்க ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ நடவடிக்கை மேற்கொண்டது.

காவல் உதவி ஆய்வாளர் தேவிகாவின் தலைமையில் இயங்கிய ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக் காவலர்கள், சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியருடன் இணைந்து பழங்குடியின குடியிருப்புக்கு நேரில் சென்றனர். அங்கு பள்ளிக்குச் செல்லாமல் இருந்த ஏழு குழந்தைகளைக் கண்டறிந்தனர்.

தொடர்ந்து, குழந்தைகளின் பெற்றோரைச் சந்தித்த காவலர்கள், அவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் புரியவைத்தனர்.

சிறுவயதிலேயே படிப்பை நிறுத்துவதால் எதிர்காலத்தில் கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்புகளும் பொருளியல் முன்னேற்றமும் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைப் பொறுமையாகவும் விரிவாகவும் எடுத்துக் கூறினர்.

இதையடுத்து, குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் முழு மனத்துடன் ஒப்புக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்