சேலம்: பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தமிழகத்தில் முதன்முறையாகச் சேலம் மாநகரக் காவல்துறையில் வியாழக்கிழமை (மே 14) பணியைத் தொடங்கியுள்ளது.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்புக்காக இச்சிறப்புப் படை தொடங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார்.
மாநகரக் காவல் துறை ஆணையர் அனில் குமார் கிரியின் மேற்பார்வையில் இப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் அதிரடிப்படையின் முக்கியச் செயல்பாடுகள்
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் தீவிரக் கண்காணிப்பு; பெண்களுக்கு எதிரான சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து, உடனடி நடவடிக்கை எடுப்பது; அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது; பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை உறுதிசெய்வது முதலியவை இப்படையின் முக்கியச் செயல்பாடுகள்.
இப்படையினருக்கு நான்கு சக்கர வாகனங்கள், நவீன கண்காணிப்புக் கருவிகளுடன், பாதுகாப்பை உறுதி செய்ய உடலில் அணியும் கேமராக்களும் வழங்கப்பட்டுள்ளன.
“பெண்கள் தொடர்பான புகார்கள் அல்லது அவசர அழைப்புகள் வந்தால், சிங்கப்பெண் அதிரடிப்படை உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கும்,” என்று இப்பணியைத் தொடங்கி வைத்த ஆணையர் அனில் குமார் கிரி உறுதியளித்தார்.
இத்திட்டம் முதற்கட்டமாகக் காவல்துறையின் தலைமையக நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும்.

