கொடைக்கானல்: கொடைக்கானலுக்குச் சுற்றுலாப் பயணம் செல்வோர் அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளைப் பார்வையிட தனித்தனியே நுழைவுக் கட்டணம் பெற வேண்டியிருந்தது. இப்போது, அங்குள்ள அனைத்துப் பகுதிகளையும் பார்வையிடுவதற்கு ஒரே இடத்தில் நுழைவுச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்கின்றனர்.
கொடைக்கானலில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை காட்டுவளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு நாள்தோறும் காலை 9 முதல் 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.20, வெளிநாட்டினருக்கு ரூ.1,000 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.