சென்னை: சென்னையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், ஆட்டோ ஆகிய வாகனங்களில் ஒரே பயணச் சீட்டில் பயணம் செய்வதற்கான செயலியை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் (கும்டா) ஈடுபட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மாநகரப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வகையில் ஒரே பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக புதிய செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதற்கு ‘அண்ணா செயலி’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்தச் செயலியில் புறப்படும் இடம், சேரும் இடம், பயணிக்கும் வாகனம் போன்றவற்றை பதிவு செய்தால், குறைந்த செலவில் விரைவாகப் பயணம் செய்யும் வழிமுறைகளைக் காட்டும்.
அந்த வழிகாட்டியைப் பயன்படுத்தும் வகையில் கட்டணம் செலுத்தினால், ‘கியூ ஆர்’ குறியீடு வடிவில் பயணச் சீட்டு உருவாகும்.
தற்போது, சுமார் 50க்கும் மேற்பட்ட துறை சார் அதிகாரிகளால், சோதனை அடிப்படையில் அண்ணா செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, ‘கும்டா’ சிறப்பு அதிகாரி ஐ.ஜெயக்குமார் கூறுகையில், “முதற்கட்டமாக மாநகரப் பேருந்து, சென்னை மெட்ரோ ரயில், ஆட்டோ ஆகியவற்றில் பயணம் செய்ய வழிகாட்டும் வகையில் செயலி வடிவமைக்கப் பட்டுள்ளது.
“இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்தச் செயலியை அறிமுகம் செய்யவிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“அதனைத் தொடர்ந்து, மின்சார ரயில்களிலும் பயணம் செய்யும் வகையில் செயலியில் மாற்றம் செய்யப்படும்.
“மேலும், பல்வேறு நவீன வசதிகளை செயலியில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.