சிவகங்கை: கல்குவாரியில் கற்கள் சரிந்து தொழிலாளர்கள் ஐவர் உயிரிழந்த விபத்து தமிழ்நாட்டின் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை (மே 20) நேர்ந்தது.
சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியாருக்குச் சொந்தமான ‘மேகா புளூ மெட்டல்’ என்ற கல்குவாரி இயங்கி வருகிறது. அக்குவாரியின் உள்ளேயும் பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. அங்கு ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வேலைசெய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
அத்துடன், பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் கற்களைக் கொண்டு எம்.சாண்ட் மணல் தயாரித்து விற்கும் பணியையும் அக்குவாரி மேற்கொள்கிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல குவாரி செயல்படத் தொடங்கியது. அப்போது, அங்குக் குவித்து வைக்கப்பட்டிருந்த கற்கள் திடீரெனச் சரிந்து, அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள்மீது விழுந்து நசுக்கின.
இதனையடுத்து, கற்களுக்குள் சிக்கியவர்களை மீட்க பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளர்கள் மூவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட வழியில் மேலும் இருவர் இறந்துவிட்டனர்.
படுகாயமடைந்த மைக்கேல் எனும் தொழிலாளருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாண்டவர்களில் ஒருவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டது.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தத் துயர நிகழ்வால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

