சென்னை: காலஞ்சென்ற நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு அவருடைய மகனும் நடிகருமான பிரபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது மூத்த சகோதரர் ராம்குமார் வாங்கிய கடனுக்காக தனக்குச் சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்குவது சரியன்று என பிரபு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது வாழ்நாளில் இதுவரை யாரிடமும் ஒரு ரூபாய்கூட கடன் வாங்கியதில்லை எனத் தமது மனுவில் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தம் மூத்த சகோதரர் ராம்குமாரின் கடன்களைத் திருப்பிச் செலுத்திவிட்டு, அவரிடம் பிறகு அத்தொகையைப் பெற்றுக்கொள்ளலாமே என நீதிமன்றம் முன்வைத்த யோசனையை ஏற்கவும் அவர் மறுத்துவிட்டார்.
ராம்குமார் அதிகமாக கடன் வாங்கியுள்ளார் என்றும் அவருக்கு உதவு இயலாது என்றும் பிரபு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் மீதான விசாரணை வரும் 8ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


