விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது சின்னகாமன்பட்டி. இங்கு இயங்கி வந்த பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1ஆம் தேதி) காலை இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
விபத்துக்கு முன்பு ஆலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதில், ஆலையில் உள்ள மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமாயின.
இந்த விபத்தில் ஏழு பேர் உடல் சிதறி பலியான நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.
தீயணைப்பு, மீட்புப் படையினர் இறந்தவர்களின் உடல்களையும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களையும் மீட்டனர்.
விபத்தில் சிக்கிய சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவரும் நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தார், அவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட மருத்துவமனை முன்பு குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியும் ஒன்று. இங்கு பட்டாசுத் தொழில் முதன்மைத் தொழிலாக உள்ளது.
இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90 விழுக்காடு விருதுநகர் மாவட்டத்தின் பங்களிப்பாகும்.
தற்போது அங்கு 2,500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஆலைகளில் அவ்வப்போது வெடி விபத்து ஏற்படுவதும் அதில் பலர் உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளது.