சுடுகாட்டில் ஆறு பிணங்களைக் காணவில்லை; கிராம மக்கள் குற்றச்சாட்டு

1 mins read
e58a3b71-8811-48a6-87e4-d29e66b62794
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட ஆறு பிணங்களைக் காணவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். - படங்கள்: ஊடகம்

திண்டுக்கல்: சுடுகாட்டில் ஓர் உடலை அடக்கம் செய்வதற்காகச் சென்ற கிராம மக்களுக்கு அங்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

கிட்டத்தட்ட 10 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டிருந்தது. அத்துடன் அவ்விடத்தில் இருந்த ஆறு சமாதிகளும் ஆறு பிணங்களும் காணாமல் போய்விட்டன.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஸ்ரீராமரம் ஊராட்சிக்கு உட்பட்ட பூத்தாம்பட்டி ஏ.டி.காலனியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கென தனியே ஒரு மயானம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாண்டதை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்குச் சென்றுள்ளனர் மக்கள்.

பிணங்கள் காணாமல் போயிருந்ததைக் கண்ட அவர்கள், விசாரித்ததில் நள்ளிரவு நேரம் அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் மண்ணை அள்ளிப் போட்டதை அறிந்துகொண்டனர்.

சமாதிகளையும் அந்த நபர்கள் தோண்டி எடுத்ததாகத் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மர்ம நபர்களைக் கண்டுபிடித்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதையடுத்து வேடசந்தூர் காவல்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்த பிறகு மறியலை மக்கள் கைவிட்டனர்.

இந்நிலையில், காணாமல் போன பிணங்கள் குறித்து கிராம மக்கள் குற்றம் சாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்