சென்னை: சொத்து ஆவணங்களை மறைத்து ஆறு கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த புகாரில், நீலாங்கரையைச் சேர்ந்த திரைப்படப் பிரமுகர் மனோகர் பிரசாத்தை, 63, சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை புரசைவாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குநர் ராகுல்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய சென்னைக் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கியிருந்த மனோகர் பிரசாத்தைக் காவல்துறையினர் நேற்றுக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆனந்த் பிரசாத் உள்ளிட்ட மற்றவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மனோகர் பிரசாத், அவரது மகன் ஆனந்த் பிரசாத், குடும்பத்தினர் தங்களது சொத்துகள் ஏற்கெனவே தனியார் வங்கியொன்றில் அடைமானம் வைக்கப்பட்டிருந்ததையும் சென்னை உயர் நீதிமன்றத்தால் அவற்றுக்கு எதிராக இணைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததையும் மறைத்து அடைமானம் வைத்துத் தமது நிறுவனத்திடம் ஆறு கோடி ரூபாய் கடன் பெற்றதாக ராகுல்குமார் புகார் அளித்திருந்தார்.
மேலும், வாங்கிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
