தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்கு குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட ஐவர் கைது

2 mins read
f7234cce-b034-405b-b653-aa0e8fc132e7
கைது செய்யப்பட்ட ஐவர். - படம்: ஊடகம்

சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நான்கு குழந்தைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக தந்தை உட்பட ஐந்து இடைத்தரகர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

எடப்பாடியை அடுத்துள்ள சித்தூர் திம்மபதியான்வளைவு பகுதியைச் சேர்ந்தவர்கள் சேட்டு, குண்டுமல்லி தம்பதியர். கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்ப வறுமையால் தவித்த சேட்டு தங்களது இரண்டு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தையை தரகர் மூலம் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த தம்பதியருக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனையும் விற்பதற்காக எடப்பாடி பகுதியைச் சேர்ந்த குழந்தை விற்பனைத் தரகர்களான செந்தில் முருகன், முனுசாமி ஆகியோரை சேட்டு தொடர்புகொண்டுள்ளார்.

அப்போது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவருக்கு ஆண் குழந்தை தேவைப்படுவதாகவும் அவர் குழந்தைக்கு ரூ. 1 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளார். அத்துடன், குழந்தையை முறைப்படி தத்து கொடுக்கவேண்டும் எனவும் அவர் கூறியதாகத் தெரிகிறது.

இதற்கு சேட்டு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, சேலத்தைச் சேர்ந்த குந்தைகள் நல அலுவலர் ஸ்ரீ முரளியிடம் இதுகுறித்து தேவராஜ் புகார் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அதிகாரிகள் சேட்டுவைப் பிடித்து விசாரித்தபோது, சட்டவிரோதமாக ஏற்கெனவே அவர் மூன்று குழந்தைகளைத் தரகர்கள் மூலம் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து சேட்டுவைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், குழந்தைகள் விற்பனை செய்யும் தரகர்களான செந்தில்முருகன், முனுசாமி, பாலாமணி, லோகாம்பாள் என மொத்தம் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேறு எங்கெல்லாம் குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து ஐவரையும் சிறையில் அடைத்தனர்.

குறிப்புச் சொற்கள்