விருதுநகர்: தமிழ்நாட்டில் சனிக்கிழமை (ஜனவரி 4) காலை பட்டாசு ஆலை ஒன்றில் நேர்ந்த வெடிவிபத்தில் அறுவர் மாண்டுபோயினர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பொம்மையாபுரத்தில் பாலாஜி என்பவருக்குச் சொந்தமான சாய்நாத் ஃபயர்வொர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை அமைந்துள்ளது.
சனிக்கிழமை காலை வழக்கம்போல் அந்த ஆலையில் உள்ள 35 அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலவகைப் பட்டாசுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதில் ஆலையின் நான்கு அறைகள் தரைமட்டமாயின.
அதில் ஊழியர்கள் ஆறு பேர் உடல் சிதறி பலியாகிவிட்டனர். மேலும் ஒருவர் 90 விழுக்காட்டுத் தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பட்டாசு தயாரிப்பிற்காக வேதிப்பொருள்களைக் கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த அறுவரின் குடும்பத்தினருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். வெடிவிபத்தைத் தொடர்ந்து, சாய்நாத் ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, உரிமையாளர் பாலாஜி உள்ளிட்ட நால்வர்மீது கவனக்குறைவாகச் செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றித் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தியது உட்பட ஐந்து பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
மேலும், சிவகாசியில் உள்ள மத்திய பெட்ரோலிய, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகக் கிளை அதிகாரிகள் விபத்து நேர்ந்த ஆலையை நேரில் ஆய்வுசெய்து, வேதிப்பொருள் மாதிரிகளைச் சேகரித்தனர்.