தர்மபுரி: தமிழக மாணவர்களை இழிவுபடுத்தும் வகையில் ஆளுநர் செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
தர்மபுரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், பொறாமை காரணமாக தமிழக வளர்ச்சி குறித்து ஆளுநர் பொய்யான தகவல்களைப் பேசி வருவதாகக் குறிப்பிட்டார்.
“திமுக அரசின் சாதனைகளை ஆளுநரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் மேடைதோறும் அவர் புலம்பி வருகிறார். ஆனால், ஆளுநர் கம்பு சுற்ற வேண்டிய இடமென்றால், அது பாஜக ஆளும் மாநிலங்கள்தான்
“தற்போதுள்ள ஆளுநரே நீடிப்பதுதான் தமிழகத்துக்கு நல்லது. தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலம் என்பதை மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே தெளிவாக கூறுகின்றன.
“பள்ளிக்கல்வியில் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டை விமர்சிக்கிறார். இதன் மூலம் தமிழக மாணவர்களை அவர் இழிவுபடுத்துகிறார்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே, தமிழக அரசு குறித்து அவதூறு பரப்பப்படுவதாகத் தெரிவித்தார்.