கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு

1 mins read
40937633-b3f6-4501-92c0-f6604492a4ad
திருப்பூரில் கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் மீது காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. - படம்: இந்து தமிழ்

திருப்பூர்: கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, திருப்பூர் வந்த கவிஞர் வைரமுத்துவுக்கு செருப்பு வீசப்பட்ட நிகழ்வு பரபரப்பாகி உள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை (ஜனவரி 22) வைரமுத்துவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்போது ஒரு பெண்மணி திடீரென தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி வைரமுத்துவிற்கு வரவேற்பு அளித்த கூட்டத்தின் மீது வீசினார். நல்வாய்ப்பாக செருப்பு வைரமுத்து மீது படாமல் தள்ளி விழுந்தது.

பின்னர் வழக்கறிஞர்கள் வைரமுத்துவை பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவரது பெயர் ஜெயா என்பதும், அவர் மனநலம் பாதித்தவர் என்பதும் உறுதியானது. அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னர் அந்தப் பெண் அன்று காலையில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் போக்குவரத்து பாதிக்கப்படவே, காவல்துறையினர் போக்குவரத்தைச் சீரமைத்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

தனது கோரிக்கைகள் இதுவரை எந்த அரசாலும் நிறைவேற்றப்படவில்லை என கூறி, அவர் அடிக்கடி இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் காவல் துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்