சென்னை: நேர்மையான மக்களுக்கான அரசு அமைய ஆட்சியிலும் அதிகாரப்பகிர்வு என்ற முழக்கத்தை ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ நிறுவனம் தொடர்ந்து முன் வைத்து வருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பிரசாரம் நிச்சயம் கவனம் பெறும் என அவர் தாம் வெளியிட்ட காணொளிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டணிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக ஆதவ் அர்ஜுனா மீது எழுந்த புகாரின் பேரில் அவரை ஆறு மாதங்களுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக விசிக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரசாரம் மக்கள் சக்தியுடன் விரைவில் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த தலைமுறையினரிடம் அரசியலை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் தனது ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ நிறுவனம் செயல்படும் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
வருங்கால சமூகத்தை அரசியல் மயமாக்கி, தேர்தல் அரசியலை அனைவருக்குமான இடமாக வென்றெடுக்கும் ஓர் இயக்கமாக ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ நிறுவனம் விரைவில் வீறுநடை போடும் என்றும் அந்த காணொளிப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.