சென்னை: அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டபடி, அனைத்தும் செயல்பட்டால், வரும் டிசம்பர் மாதத்தில், ஊரகப் பகுதிகளிலும் சிற்றுந்து சேவை தொடங்கிவிடும்.
சிற்றுந்துகளை இயக்குவதற்கான வழித்தடங்களைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, வழிகாட்டுதல்களை உருவாக்குவது உள்ளிட்டப் பணிகள் அடுத்த 2 முதல் 3 மாதங்களில் நடைபெறவிருக்கின்றன.
அதாவது, இந்தச் சிற்றுந்துகள், ஒரு கிராமத்தில் குறைந்தது நூறு குடும்பங்கள் இருந்து, இதுவரை அரசுப் பேருந்தோ, தனியார் பேருந்தோ இயக்கப்படாத பகுதிகளில், வந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிற்றுந்துகள் இயக்கப்படவிருக்கும் கிராமங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறு நகரங்களின் வழியாக இயக்கப்படவிருக்கும் வழித்தடத்தை போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், மண்டல போக்குவரத்து அதிகாரிகளும் உருவாக்கி வருகிறார்கள்.
இது தொடர்பாக, கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் என அனைவரிடமும் கருத்துகளும் கேட்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு புதிய சிற்றுந்தும் 70 விழுக்காடு பேருந்து வசதியற்ற பகுதிகளிலும், 30 விழுக்காடு பேருந்து வசதியிருக்கும் பகுதியையும் இணைக்கும் வகையில் வழித்தடம் உருவாக்கப்பட்டு வருகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு, போக்குவரத்துத் துறை இது தொடர்பாக வரைவறிக்கையை வெளியிட்டிருந்தது. இருக்கும் சிற்றுந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்வது மற்றும் நகர - ஊரகப் பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய வழித்தடங்களை உருவாக்குவது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


