சென்னை: பெண்களின் உரிமை, பொருளாதார தன்னிறைவுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து தீட்டி வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்துப் பேசிய அவர், பெண்கள் கல்வியறிவு பெறவேண்டும் என்பதைத் தாண்டி, பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி என ஒவ்வொரு திட்டத்தையும் பெண்கள் கல்வியறிவு பெறவேண்டும், நல்ல வேலைகளுக்குப் போகவேண்டும், அதிகாரத்தில் சென்று அமரவேண்டும், உலக அறிவு பெறவேண்டும் என்பதற்காகச் செயல்படுத்தி வருகிறோம்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
பெண்கள் உயர்ந்தால்தான் ஒரு சமூகம் நிமிர்ந்து நிற்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், பெண்ணடிமை ஒழிந்து, பெண்கள் அதிகாரம் பெறும் அம்மாற்றத்தை நோக்கி இன்று தமிழகம் வேகமாக முன்னேறுவதாகக் கூறினார்.
“பெண்களுக்கு திறன் பயிற்சி, மடிக்கணினி, தையல் பயிற்சி ஆகியவை வழங்கப்படுகின்றன. இதனால் அவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர்,” என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.