சென்னை: இந்திய அரசின் உதவியோடு, இலங்கையில் உள்ள ஐந்தாயிரம் வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, இந்திய அரசு ரூ.143 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது.
பொருளியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவும் வகையில் 400 கோடி டாலர் மதிப்பிலான உதவியை வழங்கியுள்ளது இந்திய அரசு.
அதிலிருந்து இலங்கையிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இலங்கை மின்வாரியம், இலங்கை புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 5,000 வழிபாட்டுத்தலங்களில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்புக்கான பேனல்களைப் பொருத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 5,000 வழிபாட்டுத் தலங்களில் இருந்து 25 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என்றும் இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்களின் பயன்பாட்டுக்குப் போக, மீதமுள்ள மின்சாரத்தை இலங்கை மின்வாரியம் எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனால் வழிபாட்டுத் தலங்களின் மின்சார செலவினங்கள் குறையும் என்றும் மாசற்ற சுத்தமான எரிசக்தி இலங்கையின் மாற்றத்தை வலுப்படுத்தும் என்றும் இந்திய தூதரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.