தமிழகத்தில் புதிய உச்சத்தைத் தொட்டது சூரிய மின்சக்தி உற்பத்தி

தமிழகத்தில் புதிய உச்சத்தைத் தொட்டது சூரிய மின்சக்தி உற்பத்தி

1 mins read
f75b4bcc-3d68-4974-8782-f6ccd045ce6e
நாடு முழுவதும் சூரிய மின்சக்தி உற்பத்தி நடவடிக்கைகளை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. - கோப்புப்படம்: தினமணி

சென்னை: தமிழகத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழக பசுமை எரிசக்திக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தமிழகத்தில் இயங்கி வரும் சூரிய மின்னாலைகளில் உற்பத்தி சீராக அதிகரித்து, 5.48 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. வரும் நாள்களில் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என தமிழக தூய எரிசக்திக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் சூரிய மின்சக்தி உற்பத்தி நடவடிக்கைகளை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மாநில அரசு சார்பாகவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் பல்வேறு மானியத் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. இதனால் நாட்டின் சூரிய மின்சக்தி உற்பத்தி அளவானது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய 12 மெகாவாட் திறன்கொண்ட சூரிய மின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் நாள்தோறும் சராசரியாக 4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

மின்னாலைகள் தங்களின் தேவைக்குப் போக மீதமுள்ள மின்சாரத்தைத் தமிழக மின்வாரியத்துக்கு விற்பனை செய்வது வழக்கம்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி அக்குறிப்பிட்ட மின்னாலைகள் ஒரே நாளில் 5.39 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தன.

இந்நிலையில், தற்போது அச்சாதனை முறியடிக்கப்பட்டு, ஒரே நாளில் 5.48 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது புதிய உச்சமாகும்.

குறிப்புச் சொற்கள்