தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூரியசக்தி மின்சாரம்: மூன்றாவது இடத்தில் தமிழகம்

2 mins read
60bfaeae-1aef-4c0e-9077-4d74520b7789
சூரிய சக்தி மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் நிலவரப்படி, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையங்களின் திறன் 9,270 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் சூரியசக்தி மின் நிறுவு திறனில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று தினமலர் தகவல் தெரிவிக்கிறது.

சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு அனைத்து தரப்பினரையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. பெரிய நிறுவனங்கள் சொந்த பயன்பாடு அல்லது மின் வாரியங்களுக்கு விற்க அதிக திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து வருகின்றன.

மேலும் கட்டடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நாட்டில் செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, மாநிலம் வாரியாக உள்ள சூரியசக்தி மின் நிறுவு திறன் விவரத்தை மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை வெளியிட்டுள்ளது.

அதில், ராஜஸ்தான் ஒட்டுமொத்தமாக 24,224 மெகாவாட் சூரியசக்தி மின் நிறுவு திறனுடன் முதலிடத்திலும் குஜராத் 15,120 மெகாவாட் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

தமிழகம் மொத்தம் 9,270 மெகா வாட் உற்பத்தியுடன் மூன்றாவது இடத்தில் வந்துள்ளது.

கர்நாடகா 8,930 மெகா வாட் உற்பத்தியுடன் நான்காவது இடத்திலும்; மகாராஷ்டிரா 7,500 மெகா வாட் உற்பத்தியுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

கடந்த ஜூன் நிலவரப்படி ராஜஸ்தான் முதலிடம் வகித்தது.

குஜராத் இரண்டாமிடத்தில் இருந்த நிலையில் கர்நாடகா 8,819 மெகா வாட் உடன் மூன்றாவது இடத்திலும் தமிழகம் 8,617 மெகா வாட் திறனுடன் நான்காவது இடத்திலும் இருந்தன.

தற்போது, கர்நாடகாவை பின்னுக்குத் தள்ளி தமிழகம் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்