சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை ஒட்டியுள்ள ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் வகையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் 19.06 ஏக்கர் நிலத்தை ரூ.278 கோடி செலவில் கையகப்படுத்தி உள்ளது.
மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குப் பின்புறம் அமைந்துள்ள இந்த நிலம், ‘ஏஐ அசெட்ஸ் ஹோல்டிங்’ நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட நிலையில், தற்போது விமான நிலைய ஆணையத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய சரக்கு முனையம் வழியே தினமும் சராசரியாக 400 டன் ஏற்றுமதி சரக்குகளும் 800 டன் இறக்குமதி சரக்குகளும் கையாளுப்படுகின்றன. இது கடந்த ஆண்டை விட ஏறக்குறைய 30 விழுக்காடு அதிகம்.
வாரத்தில் குறைந்தது நான்கு நாள்கள், பிற்பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரை சரக்கு வாகனங்களின் வருகை மிக அதிகமாக இருக்கிறது.
சரக்குகளை ஏற்றி இறக்க வரும் லாரிகள், தனியார் பேருந்துகள் ஜிஎஸ்டி சாலையோரம் வரிசையாக நிறுத்தப்படுவதால், அந்த வழியே செல்லும் வாகனமோட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலால் தவிக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பு, ஜிஎஸ்டி சாலையின் அழுத்தத்தைக் குறைக்க விமான நிலையத்தின் பின்புறப் பகுதிக்கு சரக்கு முனையத்தை மாற்ற பரிந்துரைத்துள்ளது. இதற்காக நீண்டகால நோக்கில் இந்த நிலத்தைப் பயன்படுத்துவது குறித்து மூன்று முக்கியத் திட்டங்களை விமான நிலைய ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இதன்மூலம் ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
