சென்னை: கடந்த சில நாள்களுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் பிடிபட்ட ஒரு சிலரிடம் விசாரணை செய்ததில் மன்சூர் அலிகானின் மகனும் சம்பந்தப்பட்டிருப்பது அறிந்து காவலர்கள் அவரைக் கதைது செய்துள்ளனர்.
நேற்று காலை திருமங்கலம் காவல் நிலையம் வரவழைக்கப்பட்ட அலிகான் துக்ளக் மற்றும் அவரது நண்பர்களான சேது சாகிப், முகமது ரியாசுதீன், பைசல் அகமது ஆகியோரிடம் நேற்று முழுவதும் திருமங்கலம் காவலர்கள் விசாரணை நடத்தினர். 12 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருமங்கலம் காவலர்கள் நடத்திய விசாரணையில் கஞ்சா, ஓபியம் மற்றும் மெத்தபட்டமைன் ஆகிய போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதும் விற்பனை செய்ததும் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.
அவ்வப்போது சர்ச்சைக்கு உள்ளாகும் மன்சூர் அலிகானின் மகன் போதைப் பொருள் விற்பனையில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக, கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் ஏற்கெனவே கைது செய்யபட்டிருந்தனர். அதையடுத்து, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைத்தொலைபேசிகளைக் காவலர்கள் ஆய்வு செய்தனர்.
அதில் பதிவான எண்களைக் கொண்டு, அவர்களைக் காவலர் தொடர்புகொண்டு விசாரணை செய்ததில் மன்சூர் அலிகான் மகனின் கைத்தொலைபேசி எண்ணும் கைதானவர்களின் கைத்தொலைபேசியில் இருந்துள்ளது. மன்சூர் அலிகான் வீட்டில், அவரது மகன் துக்ளக் தங்கியிருக்கிறார். இதையடுத்து இவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துக்ளக், சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு பிரபல கல்லூரியில், விஸ்காம் படித்து வருகிறார். இவர், ஒரு படத்தில் திரைப்பட துணை இயக்குநராக பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது. மன்சூர் அலிகான், ஏற்கெனவே திரிஷாவை இழிவாகப் பேசியது உள்ளிட்ட சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். இதையடுத்து, அவரது மகனும் இப்படி கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.